அத்துமீறும் இந்திய மீனவர்கள் – ஐ.நாவின் தலையீட்டை கோரும் இலங்கை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தும் வருகின்றனர். இதனால் வடக்கு கடலில் பதற்றம் நிலவுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விடயம் புதுடெல்லியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ் உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார், நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவுக்கு அருகாமையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 5 இழுவைப் படகுகளுடன் 27 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதொடர்பில் ஐ.நா. தரப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply