பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொதிகளை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 பொதிகளில் அடைக்கப்பட்ட இந்த ஹெராயின், நவம்பர் 10 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ஓமான் ஏர் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்கவின் விமான சரக்கு முனையத்திற்கு அனுப்பப்பட்டதுடன் ஹெரோயின் அடங்கிய சரக்கு நிட்டம்புவ திஹாரியவில் இயங்கி வரும் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 5 இல் வசிக்கும் 43 வயதுடைய நபர் ஒருவர் சரக்குகளை விடுவிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு நேற்று இரவு வந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. எனினும், விமான சரக்கு பொதிகளை திறந்து சோதனையிட்ட போது, 10 கிலோ 500 கிராம் எடை கொண்ட இந்த ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மற்றும் விமான சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரி ஆகியோர் சரக்குகளை பெற்றுக்கொள்ள வந்த நபரையும் சரக்குகளை அகற்ற முயன்ற இரண்டு அலுவலர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.