கடந்த ஒக்டோபர் மாதம் பெலிகமுவவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்று தொட்டலங்கா சேதாவத்தை பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தம்புள்ளை, கப்புவத்தையைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பெலிகம விற்பனை நிலையத்தில், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 52 வயதான கே.சுவாமிநாதன் என்ற பாதுகாவலரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.