கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டமானது இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல், பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் 24 மணி நேரமும் செயல்படும் கடவுச்சீட்டு வழங்கும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று (7) கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக, நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் காவலரன் ஒன்றை நிறுவவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply