மதுபானசாலை அனுமதியை இரத்து செய்யக்கோரி நெடுந்தீவில் போராட்டம்!

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக 100இற்கும் மேற்பட்ட பொதுமக்கள்,
வேண்டாம் வேண்டாம் எமக்கு சாவு வேண்டாம்!
எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே!
எனும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மதுபானசாலைக்கு அருகில் 100 மீற்றர் தூரத்தில் பாடசாலை, கோயில்கள் என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபானசாலை அனுமதி வேண்டாம் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் இது தொடர்பில் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தமையால் மதுவரித் திணைக்களம் தற்காலிக அனுமதியை வழங்கியது.

குறித்த அனுமதியை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் மது வரித் திணைக்களத்திற்கு இடையில் இன்று பிரதேச செயலகத்தில் வைத்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நிலையில் அனுமதியினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply