
மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் மீது, பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் பாடசாலை மாணவர்களை தாக்கியுள்ளதாக அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றும் பாடசாலையின் பழைய மாணவருடன் பாடசாலைக்குள் அத்து மீறி நுழைந்த குறித்த சந்தேகநபர்கள், தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களைத் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்றச் சென்ற மாணவிகளையும் பூந்தொட்டிகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற பொருட்களால் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிசில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.