
மஹியாங்கனையிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டுள்ளது.
லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதி வாகனத்தை கட்டுப்படுத்த முடியாது போனமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டிருந்த போதும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணலை அகற்றி வீதியின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்திருந்த நிலையில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.