
இந்த வருடம் தொடக்கம் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் அரச ஊழியர்களுக்கு இது போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
கொவிட் – 19 தொற்று காலத்தில் தவறான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் போதும் கூட, சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொடுத்ததன் காரணமாக தான் சுகாதாரத்துறை ஓரளவு சீரான நிலையில் கொண்டு செல்ல முடிந்தது.
மேலும் அரச ஊழியர்கள் மீது பாரிய அளவு வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட நம் நாடு என்ற எண்ணத்துடன் சேவையை வழங்குபவர்களை மதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் புதிய சம்பள அதிகரிப்பின் படி, அடிப்படை சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும்.
அத்துடன், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் வைத்திய அதிகாரிகள் சம்பளம் அதிகமாக இருக்கும். மேலும், ஆரம்ப நிலை வைத்திய அதிகாரியின் அடிப்படை சம்பளம் 26,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.