சபாநாயகரின் கருத்தால் நாடாளுமன்றில் அமைதியின்மை!

இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கருத்து கூற முற்பட்ட வேளையில் சபாநாயகர் இடைமறித்தமையால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அவரது ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள் வெட்டு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

அத்துடன் இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறினார். சபாநாயகரின் இந்தக் கருத்தால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா “ நாங்கள் தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? என சபாநாயகரிடம் கோபமாக நடந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் மன்னிப்பும் கோரினார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்கள் பேச ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply