
வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பெண் ஒருவர் டி-56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேகித்த வீதி, வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விடுதியின் குளியலறையில் பெண்ணொருவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.
மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீண்டும் சுயநினைவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பின்பு பெண்ணை பரிசோதித்தபோது, அவரிடம் இருந்து 6 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, குறித்த பெண் வெளிநாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவருக்கு வழங்கப்பட்ட டி-56 துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் தொடர்பான தகவல்களும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண்ணின் வழிகாட்டுதலின் பேரில், அவர் தங்கியிருந்த அவரது இரண்டாவது திருமணத்தின் கணவரின் ராகம பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
டி-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஹீன்கெந்த, ராகம பகுதியிலுள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரான பெண்ணின் 40 வயதுடைய கணவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.