
எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கை தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில் 5வது முறையாக கூடியது.
இதன் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் அங்கு கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்களாக,
தற்போது சந்தையில் அரிசியின் விலை அதிகமாக உள்ளதோடு சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போதுமானளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில் அமைச்சரவை கவனம் செலுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த ஆண்டு ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சியால் இரண்டு முறை பயிர் சேதம் ஏற்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கணிசமாக குறைவடைந்துள்ளது.
கால்நடை தீவனத்திற்காக அரிசியை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துவதும் அரிசி பற்றாக்குறைக்கு மற்றொரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கால்நடை உற்பத்தித் துறையில் கால்நடை தீவனத் தேவைகளுக்காக உடைந்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று தீவனத்தைப் பயன்படுத்துவது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்வதற்காக விவசாய பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவை நியமிப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.