
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை மார்ச் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தியினரால், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில், பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கடமையை சரியாக செய்ய தவறியமை, பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை முதலான 27 ஊழல் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கு அமைவான உப நிரலில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பிரேரணை குறித்து இன்றைய தினம் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.