34 வருடங்களுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ள வசாவிளான் – பலாலி வீதி!

ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று (10) காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வீதி பாவனை தொடர்பில் இராணுவத்தால் விசேட நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையில் திறக்கப்பட்ட புதிய வீதியூடாக செல்வதற்கு, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தால் விசேட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வீதி காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.

குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply