
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
அதன்படி குறித்த இழப்பீடு தொகை தற்போது உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.