நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு வடக்கு மாகாணத்தின் சில மாவட்ட சட்டத்தரணிகளும்,  கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் இணைந்து இன்றைய தினம் காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது, நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக, நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட  போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்த போது, அங்கு பிரசன்னமாகியிருந்த சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

அதனையடுத்து கடந்த 07.07.2023 அன்று சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதனைக் கண்டிக்கம் வகையிலேயே இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் உட்பட வடக்கு கிழக்கு மாகாண சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply