![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/New-Project-20-796x445.jpg)
கிழக்கு மாகாணத்தில் உள்ள 3500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.
நிதி அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னர் நிலவும் வெற்றிடங்களை, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தி நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(13) மட்டக்களப்பு பழைய கச்சேரியில் ஆளுநர், மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஆளுநரை சந்தித்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மகஜர் ஒன்றையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
இவ்வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவிக்கையில்,
விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம்.
சிறிது சிறிதாக அனைவருக்கும் நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனக் கூறி கோரிக்கையடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவிக்கையில்,
பட்டதாரிகளின் கோரிக்கை அடங்கிய மகஜரை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்ததோடு, கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஆளுர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.