
எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ள நிலையில், தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராவணா எல்ல வனப்பகுதியில் நேற்று (13) மாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கடுமையாக செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டால் வனவிலங்கு மண்டலத்திற்கு மேலே உள்ள வனப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தீ நுழைவதைத் தடுக்க வன எல்லையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீப்பரவல் ஆனது யாரோ ஒருவரால் மூட்டப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.