
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
‘Bostonlanka’ சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் நாமல் ராஜபக்ச இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
அதனை மேற்கோள் காட்டி, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு சிஐடியில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய இது தொடர்பாக முழுமையான விசாரணையை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் படி நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.