மத்திய மாகாணத்தில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம்!

மத்திய மாகாணத்தில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஆளுநர் லலித் யூ.கமகே தலைமையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்றது. இதன்போது, கொவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கூறப்பட்டன.

அடுத்த மாத நடுப்பகுதியளவில் கண்டி மாவட்ட சனத்தொகையில் 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி விடலாம் என மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் பஸன் ஜயசிங்க அறிவித்தார். இம்மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸூம், 62 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு இரண்டாவது டோஸூம் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜயசிங்க அறிவித்தார்.

ஸ்புட்னித் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் பெற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், முதல் டோஸ் மூலம் ஆறு மாத காலத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறதென கண்டி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமிந்த வீரக்கோன் தகவல் தருகையில், இந்த மாவட்டம் சார்ந்த தடுப்பு மருந்தேற்றலில் 99 தசம் ஐந்து சதவீதத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விடவும் மாத்தளை மாவட்டம் முன்னணியில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் மதுர செனவிரட்ன தெரிவித்தார்.

இன்றைய கொவிட் செயலணியின் கூட்டத்தில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை மேலதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir