ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!

தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெப்ரவரி மாதம் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் அன்றைய தினமே அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இன்றைய தினம் மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இருப்பினும் பொலிஸார் சரியான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியமையால் வழக்கு விசாரணை பிறிதொரு திகதியிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செல்வராசா கஜேந்திரன் மற்றும் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்காக நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

எனினும் தடை உத்தரவை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply