இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள், வயல் நிலங்கள் என்பவற்றை மீண்டும் மக்களிடமே கையளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேப்பாப்பிலவு மக்களின் ஊடக சந்திப்பொன்று கேப்பாபிலவு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய நெருக்கடியில் தமது வாழ்விடங்களை இழந்து வயல் நிலங்களை இழந்து பொருளாதார ரீதியாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

இராணுவத்தினர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது வயல் நிலங்கள் நந்திக் கடல் உள்ளிட்ட மீன்பிடித் தளங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமக்கான சமூர்த்தி நிவாரண கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, இராணுவத்தினர் தமது தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை பிடுங்கி செல்வதனால் தேங்காய் இன்றி சமையல் செய்கின்ற நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளும் போது அன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து, மக்கின் பிரச்சினை தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply