இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்.
இந்த நிலையிலேயே, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கரும்பு, மிளகாய் விவசாயம், மருந்துத் தொழில்களை நிறுவுதல் தொடர்பான கூட்டுத் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள கைத்தொழில் பூங்காவில் கைத்தொழில்களை நிறுவுவதற்கு முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, திருப்பதி ஆலயத்தை வழிபடுவதற்கு இலங்கையில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் அவர்களில் பலர் முதியவர்கள் எனவும் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியு்ளளனர்.
எனவே இலங்கையிலும் திருப்பதி ஆலயத்தை நிறுவுமாறு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.