அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக இந்திய தூதுவர் பதிலளித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில்,  இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, பிரதித் தூதுவர் மற்றும் அரசியல் செயலர் ஆகியோரை, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ரணில் விக்ரமசிங்க அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையொட்டிய பேச்சுக்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். நாட்டின் தலைவராகத் தெரிவாகிய பின்னர் முதல் தடவையாக அவர் இந்தியாவுக்குச் செல்கின்றார்.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் போது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாத பகுதிகளை செயற்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர், ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும். இந்த விடயத்தை உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியப்படுத்துவதாக தூதுவர் கோபால் பாக்லே உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் முடிவடைந்த பின்னர் என்ன நடந்தது என்பதை மீண்டும் சந்தித்து விளக்கமளிப்பதாகவும் தூதுவர் பாக்லே, சம்பந்தனிடம் தெரிவித்தார்” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply