தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக பார்வையாளர்களாக இருக்கக்கூடாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு உரிமைகளை இழந்து அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தன்னை நேரில் சந்தித்த போதும் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான மாற்றங்கள், தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து தமிழ்பேசும் மக்களின் சரித்திர ரீதியான இடங்களை அழித்துவிடும் நோக்குடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு மற்றும் வடக்கு கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் ஜூலி சங்கிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசு இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் அசண்டையீனமாகச் செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக பார்வையாளர்களாக இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
தமிழ்பேசும் மக்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ்பேசும் மக்கள் சுய மரியாதையுடன் சுய கௌரவத்துடன் சகல உரிமைகளுடன் சந்தோசமாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூலி சங்குடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருமங்களை நிறைவேற்றுவாரா என தன்னிடம் வினவியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு, ரணிலும் தானும் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு ஒன்றாகவே சென்றதாகவும், அவரைப் பற்றி தனக்கு நன்கு தெரியும், அவர் துவேசவாதி அல்ல எனப் பதிலளித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால் இந்தக் கருமங்களை அவரால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.