இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியில் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையிலேயே, மோடிக்கு சம்பந்தன் அவசரமாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு, அடையாளம், இருப்பு ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பிலிருந்து பிரிக்க முடியாதவை என தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே உள்ளது என கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோடியை சந்திக்கம் போது, தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டுமையும் குறிப்பிடத்தக்கது.