இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சின் பிரகாரம் அவருடைய ஆலோசனையைக் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு செயற்படுவது நல்ல விடயம், அது நாட்டிற்கும் நல்லது மக்களிற்கும் நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மேலதிகமாக எதனையும் கேட்கவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு நிறைவேற்றிய 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி செயற்பட வேண்டும் என்றே அவர் கோரியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தள்ளார்.
மாகாண சபைகள் தற்போது வெறுமனவே உள்ளன. மீண்டும் அந்த மாகாண சபைகள் இயங்க வேண்டுமெனில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம்.
எனவே, மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு இந்திய பிரதமர் கோரியுள்ளதையும் தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையான தீர்வாக அமைய முடியாது. இருந்தாலும் இந்திய பிரதமர் கூறியதைக் கேட்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டுக்கும், அரசிற்கும் மற்றும் மக்களுக்கும் நல்லது எனத் தெரிவித்துள்ளார்.