இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையின் எதிரொலி ஆயுத போராட்டமாக உருவெடுத்தது. சோகமான இந்த நாளில் தாம் தமிழ் கனேடியர்கள் மற்றும் ஏனைய கனேடியர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டோரை நினைவேந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனேடிய நாடாளுமன்றில் பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, முதன் முதலாக கறுப்பு ஜூலை நினைவேந்தப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று நேற்றுடன் 40 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“1983ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த சம்பவங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்ததுடன் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னரான வன்முறைகளில் துன்பத்தை எதிர்கொண்டவர்களுக்கும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் கனேடிய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் கனேடியர்கள் நாட்டுக்கு வழங்கி வரும் பங்களிப்பினை நன்றியுடன் பாராட்டுகின்றோம்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.