ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயம், நாட்டுக்குள் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளை விட, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் இந்தியாவில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இருக்கின்றதா என கேள்வியெழுப்பியுள்ளார்.
பதவி விலகிய ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட ரீதியாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் தார்மீக உரிமையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் என்ன இருக்கின்றது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தற்போது 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடகம் ஒன்றை ஆடி வருகிறார் எனக் கூறியுள்ளார்.
இது வெறும் தொலைக்காட்சி நடிப்பு மட்டுமே. 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசும் முன்னர், முடிந்தால், மாகாண சபை தேர்தலை நடத்திக்காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் பற்றி பேசும் முன்னர் அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்று காட்டுங்கள் என கூறியுள்ளார்.
இதனை விடுத்து சர்வகட்சிக் கூட்டங்களை நடத்தி நாட்டின் பொது பணத்தை செலவிட வேண்டாம் எனக் கோரியுள்ளார்.