முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அந்த வகையில், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மக்கள் கதவடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை என்பதுடன் பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அதே நேரம் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டதுடன் வீதிகளிலும் மக்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் அவதானிக்க முடியவில்லை அத்துடன் தனியார் போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முக்கிய நகரமான சாவகச்சேரி நகரத்தில் உள்ள உணவகங்கள் தவிர்ந்த மருந்தகங்கள் உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு பொதுச்சந்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதே நேரம் அரச தனியார் வங்கிகளும் பிரதான வாயில்களை மூடி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதை முற்றாக தவிர்த்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தனியார் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை பாடசாலைகளிலும் மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடிப்போய் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டிருந்தது.
இதேவேளை பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தன.
வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் பகிரங்கமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடாத நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் தமது வர்த்தக நிலையத்தை மூடியிருந்தமையினால் ஏனைய வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தமையும் குறிப்படத்தக்கது.