சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள் அமைப்பதை தடுக்க நினைப்பவர்களின் தலைகளை வெட்டுவேன் என அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த அவர் மீண்டும் இவ்வாறு சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் இந்த நாட்டைச் சொந்தம் கொண்டாடும் சிங்களவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

புத்தரின் தத்துவத்தால் தான் அனைத்து தேசங்களுடனும் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் எந்த இனத்திற்கும், மதத்திற்கும் எதிரானவர்கள் கிடையாது எனவும், இந்த நாடு சிங்களவர்களுடையது தமிழர்கள் உரிமை கோர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பௌத்த தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்ற வகையில் தமிழர்கள் விரும்பினால் தங்களுடன் இணைந்து பயணிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பாகுபாடு கிடையாது. இலங்கையில் வாழும் அனைவருக்கும் கோவில்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைக்க உரிமையுண்டு எனத் தெரிவித்துள்ளார்.

நாம் விகாரைகளை அமைக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதோடு,  தமிழர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நம் அரசர்கள் இந்தியாவிலிருந்து பெண்களை அழைத்து வந்தனர். அந்த பெண்களுடன் அவர்களது பரிவாரங்களும், உறவினர்களும் வந்தனர்.

அவர்களின் மதத்தை பின்பற்ற விரும்பியதால் கோவில்கள் கட்டினார்கள். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. நாங்கள் அதற்கு ஆதரவாக இருந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மத தளங்களையும் மதிக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் எமது உறவினர்கள். அவர்கள் அனைவரும் இந்த நாட்டு குறித்துப் பேச உரித்துடையவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டிற்கு பெரும் அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் மலையக மக்கள் முக்கியமானவர்கள், அவர்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியை கேட்க முடியும். அதனை நான் எதிர்க்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

எனினும், ஒவ்வொரு தரப்பினரும் இவ்வாறு நாட்டை பிரித்து கேட்கும் போது இலங்கையை பிரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அகையினால் சிங்கள இலங்கையர்களாக நாம் அனைவரும் இந்த நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒருவராக மேர்வின் சில்வா காணப்படுகின்றார். கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட சம்பவங்கள் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.

ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம்.

அண்மையில் கூட வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள் அமைப்பதை தடுக்க நினைப்பவர்களின் தலைகளை வெட்டி கையிலெடுத்துக்கொண்டு களனிக்கு வருவேன் என பெரும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு பலரும் கண்டம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இனவாதத்தை கக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply