விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!

இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மீண்டும் ஆயுதங்களை எமது கைகளுக்குள் திணிக்க போகின்றீர்களா? தலையை கொய்தால் நாம் வேடிக்கை பார்ப்போமா என  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய சர்ச்சை கருத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஊடகங்களுக்காக கூட்டமைப்பினர் அக்கினி அரசியல் நடத்த முயற்சிப்பதை நாம் கண்டிக்கின்றோம்.
16 உறுப்பினர்கள் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றத்தில் இருந்தபோது நீங்கள் முன்மொழிந்து அதற்கு துணை போனீர்களா இல்லையா என இன்று  கருத்துக்கூறுபவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுடைய வாக்குகளை தமக்கு ஏற்றவகையில் ஒரு பகடையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும் அதி சொகுசு ஆடம்பர மாளிகைகள் எல்லாம் பெற்றுக் கொண்டு, அன்று பேசாமல் மௌனமாக இருந்து, இந்த நாடு பௌத்த நாடு என்று சொல்லி அங்கீகாரம் வழங்கிவிட்டு, இன்று முன்னாள் அமைச்சர் ஒருவருடைய கருத்தை வக்கிரப்படுத்தி தமிழ் மக்கள் மீது அக்கினி அரசியலை மீண்டும் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.
முன்பதாக நீங்கள் வலிந்து சென்றே மைத்திரி அரசாங்கத்திற்கு அன்று 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினீர்கள்.
அன்றைய காலகட்டத்தில் தான் வன ஜீவராசிகள் வனவளத் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் அசுரமாக வழங்கப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் அன்று அவர்களுக்கு அங்கீகாரங்களையும் பலத்தையும் வழங்கியிருந்தீர்கள். இன்று மக்களை வழமைபோன்று ஏமாற்ற முயலுகின்றீர்கள்.
அன்று முற்றுமுழுதாக மைத்திரி யுகத்தில் அவர்களுக்கு கண்மூடிக்கொண்டு ஆதரவை வழங்கியதால்தான் இந்த சம்பவங்கள் இன்று உச்சம் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு பிரதேசத்தில் 35.6 வீதமான நிலங்கள் (84664.33 ஹெக்டேயர்) வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அங்கே 3989 பேர் குடியிருக்க காணி இல்லாது திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான். அன்று தூர நோக்கத்துடன் சிந்தித்து மக்களின் நலன்களிலிருந்து முடிவுகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழமைபோன்று விவேகங்களை இழந்தவர்களாகவே இன்றும் அறிக்கைவிடத் தலைப்பட்டிருக்கின்றனர்.
எனவே மைத்திரி யுகத்தில் மக்களின் நலன்களை புறந்தள்ளி தேனிலவில் திளைத்தவர்கள் இன்று மக்கள் மீது கரிசனை கொள்வது போன்று அறிக்கயிட்டு வருகின்றனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply