ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி தகுதியானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகங்களைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்களை மாவட்ட அலுவலகத்துக்குள்ளே அரசாங்க அதிபர் அனுமதிக்கவில்லை எனவும் தான் அதனை நேரில்  பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்த ஒரு ஊடகவியலாளரை ஊடகவியலாளர் இல்லை எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த  ஊடகவியலாளரை மிக மோசமான வகையில் கூட்டங்கள் நடைபெறும் பொழுது பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான விடயங்கள் இந்த  மாவட்டத்தில் நடக்கும் அராஜகம் எனவும் அரசுக்கு தேவையான விடயங்களை நடைமுறைப்படுத்தும் போது தமிழ் மக்களை காப்பாற்ற போகின்றோம், தமிழ் மக்களை மீட்கப் போகின்றோம், கிழக்கு மாகாணத்தை மீட்க போகின்றோம் எனக்  கூறி வந்தவர்கள் தாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதமான செயல்பாடு என கண்டனம் வெளியிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் ஊடக அமைச்சருடைய ஆலோசனை கூட்டத்தில் பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மக்கள் அராஜகத்தை விரும்பும் கொலை கொள்ளை போன்ற குற்றச்சாட்டில் ஈடுபட்ட ஒருவருக்கு வாக்குகளை கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதால்  ஏற்பட்ட பின் விளைவுகளே இது என சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்காலத்தில் மக்கள் நினைத்தால் மாவட்டத்திற்கு நற்பெயர் ஏற்படுத்தக் கூடிய வகையில் தங்களை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடுதலை போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது என ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த அவர்,  சர்வதேச ரீதியாக தாங்கள் செல்லும் பொழுது கூட மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் இவர்களுடைய தவறுகளால் இவர்கள் செய்த காட்டிக் கொடுப்புகளின் காரணத்தினால் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்ந்து ஒரு அவப்பெயர் தான் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். 

இந்த அவப்பெயரை இன்னும் தாங்கள் அதிகரிக்கும் வகையாக இந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் போன்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது ஒரு பெரிய தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் காலங்களில் இந்த தவறை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply