வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23ம் திகதி அத்துமீறி வீடொன்றுக்குள் நுழைந்து, ஆணொருவரும் பெண்ணொருவரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கொலை சம்பவத்துடன், தொடர்புடைய, 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில், மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டாமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் குறித்த 3 சந்தேக நபர்களும், தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவர்களை கைதுசெய்வதற்கு வவுனியா நீதிமன்றம் நேற்றைய தினம் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பு நேற்றைய தினம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பணிகள் எதிர்வரும் 21ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் சிறைச்சாலையில் வைத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டது.
இந்தநிலையில் சந்தேக நபருக்கு 4 மாத கடூழிய சிறைதண்டனை விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.