ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆளும் கட்சிக்கு இருக்கும் கொள்கைகளுக்கும் எதிர்கட்சிக்கு இருக்கும் கொள்கைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சியின் கொள்கையிலேயே இந்த நாட்டில் அதிகமானோர் இருக்கின்றார்கள் எனவும் அதனால் இந்த உண்மைகளை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் தாம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலால் சுமார் 15 நாடுகளின் பிரஜைகள் உயிரிழந்திருக்கின்றார்கள். ஆகவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் பொதுவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடத்துள்ளார்.
எதிர்கட்சியினர் இராணுவத்தினருக்கு சேறு பூச நினைக்கின்றார்கள் என பலரும் கூறுகின்றார்கள். அவ்வாறு எதுவும் இல்லை. கடந்த பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் சரத் பொன்செகாவுக்கு அருகிலேயே தான் அமர்வதாகவும், தனிப்பட்ட ரீதியிலும் அவர் தனக்கு பல விடயங்களை கூறியிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
வருடக்கணக்காக இடம்பெற்ற யுத்தத்தில் போராடி முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை குறை சொல்வதற்கு தங்களிடம் ஒன்றும் இல்லை எனவும், ஆனாலும் சில நபர்கள் குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இது தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரிய தேவை ஒன்று இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.