யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது,
மதுவரி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர் சட்டவிரோத மதுபானசாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இவ்வாறு சட்ட விரோத மதுபானசாலைகளுக்கு மது வரி திணைக்களம் ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் வருவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே சட்ட விரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மது வரி திணைக்களத்திற்கே உள்ளது எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரத்துடன் வரவேண்டும் என கடுமையாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.