
இரவு நேரங்களில் வாகன சோதனைகளை மேற்கொள்ளும்போது எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
இரவு நேரங்களில் போக்குவரத்து சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் பல்வேறு வகையான டொர்ச் லைட்கள் பயன்படுத்தும் போது அவை சாரதிகளின் முகத்தில் படுவதால் வாகனத்தை கையாள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சில சந்தர்ப்பங்களில் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் ஔிரும் ஜாக்கெட்டுகளை அணியாததால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வாகன சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் ஜாக்கெட் மற்றும் ஒளிரும் கையுறைகளை அணிய வேண்டும். மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின்விளக்குகளை முடிந்தவரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைத் தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.