
வட மாகாணத்தின் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அலுவலகத் திறப்பு விழா நேற்றுமுந்தினம் 15ஆம் திகதி கச்சேரிக்கு முன்பாக அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டடத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் ஏற்றுமதியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களோடு மட்டுமல்லாமல் கனேடிய உயர்ஸ்தானிகர், இந்திய துணைத்தூதரக உயர்ஸ்தானிகர், வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், யாழ்மாவட்ட அரச அதிபர் உட்பட பல உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இந்த திறப்புவிழாவின் சிறப்பம்சமாக கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு பலவகையான உள்ளூர் உற்பத்திப்பொருட்களும் பாரம்பரிய உணவுவகைகளும் பரிமாறப்பட்டன.
இந்த சம்மேளனத்தின் தலைவராக சுகந்தன் சண்முகநாதன், செயலாளராக தர்மராசா தயாபரன், பொருளாளராக கனேத்திரன், உப தலைவராக வேலாயுதப் பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியாளர்களின் இந்த இணைவுக்கு துணையாக ஹற்றன் நஷனல் வங்கி, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை, வட பிராந்திய உற்பத்தியாளர் சம்மேளனங்கள் முதலானவை துணை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது பிரதேசத்தில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதியில் ஏற்படுகின்ற தடைகளை தகர்த்து குறுகிய காலப்பகுதியில் சரியான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை இந்த அமைப்பின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
வட மாகாணத்தில் உற்பத்தி செய்கின்ற தரம் வாய்ந்த பொருட்களை மற்றும் கலப்படம் அற்ற உண்மையான பொருட்களை ஏற்றுமதி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
அதுமட்டுமல்லாமல் வட மாகாண உற்பத்தியாக கூறி வெளிநாடுகளில் இருந்து போலியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமையை தடுத்து வடமாகணத்தின் உண்மையான உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் உள்ள எமது மக்களுக்கு வழங்குவதும் இதன் நோக்கமாக உள்ளது.
அத்தோடு புதிய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களிற்குத் தேவையான ஆரம்பகட்ட ஏற்பாடுகளுக்கான உதவிகள் மற்றும் உரிய ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் இந்த வடமாகண ஏற்றுமதியாளர் ஒற்றியம் மேற்கொள்ளும்.