
யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
யாசகம் பெறுபவர்களினாலும் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடவடிக்கை காரணமாகவும் நகரங்களில் போக்குவரத்து சீர்குலைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெற அழைத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையில், பணியில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், வீதிகளில் உள்ள யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.