
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், தமிழக மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை திருப்பி அனுப்பவும் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிதாக தெரிவித்ததுடன், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.