
மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்த காரணத்தால் சக ஊழியர்கள், நிர்வாக அதிகாரி ஒருவரை நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக போனஸ் வழங்கப்படாது என தொழிற்சாலை நிர்வாகம் நேற்று காலை அறிவித்ததைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இதனால் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை தொழிற்சாலையின் நுழைவு வாயிலை பூட்டி முற்றாக அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ‘புது வருட போனஸ் வழங்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதனால் தொழிற்சாலை நிர்வாகம் குறித்த விவகாரம் தொடர்பில் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இன்று (09) காலை வரை தொழிலாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஆடைத் தொழிற்துறையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதனால் போனஸ் உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது.