மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்- யாழில் பொலிஸாரின் அடாவடி!

யாழ்ப்பாணம், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் அவரை இழுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சநதிப்பு ஒன்று பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி என்பவர் செல்லவில்லை.

அதனையடுத்து, அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற பொலிஸார், சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், தான் இப்போது வேட்பாளர் இல்லை என்ற காரணத்தை கூறி சந்திப்புக்கு வரவில்லை என பொலிஸாருக்கு பதிலளித்தார்.

அதற்கு பொலிஸார், தாங்கள் அழைத்தால் பொலிஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிய போது, மகனுடனும் பொலிஸார் முரண்பட்டுக்கொண்டனர்.

பின்னர் குறித்த இளைஞனை மேலங்கி இல்லாமல், சாரத்துடன் கைது செய்த பொலிஸார், சாரத்தைப் பிடித்து இழுத்துச் செல்லும்போது சாரம் அவிழ்ந்ததை கூட கவனிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

மேலங்கி இல்லாது, சாரம் அவிழ்ந்த நிலையில் வீதியில் இளைஞனை பொலிஸார் இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பல தரப்பினரும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply