
கல்கிஸை – கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயிரிழந்த இளைஞன் ஒரு நகர சபை ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில், ஒரு கிளை வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இளைஞனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் தாயார் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ளார்.
உயிரிழந்த இளைஞன் 2023 இல் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் போதைப்பொருள் கடத்தல்காரர் படோவிட்ட அசங்கவின் உறவினர் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.