
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி இன்று (23) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய, மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடாத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் டேன் பிரியசாத் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், இரண்டு தோட்டாக்கள் மார்பிலும் இரண்டு தோட்டாக்கள் தோள்பட்டையிலும் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டில் டொன் பிரியசாத் உயிரிழந்துவிட்டதாக முதல் தகவல்கள் வெளியாகிய போதும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.
எனினும் இன்று (23) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.