
எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவை முன்னிட்டு கிரீஸ் மரத்தை தயார் செய்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், அதிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பிடிகல, அமுகொட சிறிவிஜயாராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன் போது புத்தாண்டு விழாவிற்காக கிரீஸ் மரத்தை தயார் செய்துகொண்டிருந்த வேளையில், துரதிர்ஷ்டவசமாக 40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து பாடசாலை மாணவன் தவறி விழுந்துள்ளான்.
தவறி விழுந்த பாடசாலை மாணவனை எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் இம்முறை க.பொ.த. பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்தவர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.