
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புவதாகக் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.