
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (19) ஆரம்பமாகிறது.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை 29ஆம் திகதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் 21 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்களிப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 227 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 112 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் நாளை மறுநாள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.