
தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்றையதினம் (21) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைமுறைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திற்காக பிரதிநிதிகள் தெரிவு, தேர்தல் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளது.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடுவதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இன்று தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்றையதினம் 112 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்காளர் அட்டைகள் அடங்கிய பொதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக, தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.