
தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 24, 25 மற்றும் 28, 29ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளதுடன், இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை முன்னைய காலத்தில் வழங்கியிருந்த போதும், இம்முறை தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கடந்த காலங்களில் பதிவான சில சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை அது தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே இம்முறை தபால் மூல வாக்களிப்பின் போது, அலுவலக அடையாள அட்டையை ஆள் அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கின்ற தபால் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை அடையாளமிட வாய்ப்பளிக்கக்கூடாது.
தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தபால் மூல வாக்களிப்பின்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.