தலைமன்னாரில் உள்ள ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட படகு சேவை திட்டம்!

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லும் படகு சேவை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த திட்டத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக குழு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர், முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply