
கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று (06) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நபர் ஒருவர் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த நபரை கைது செய்வதற்காக குறித்த பகுதிக்கு சென்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்த நபர் சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.